×

மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்: குடிநீர் வாரியம் தகவல்

மாமல்லபுரம், மே 4: மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் 3வது ஆலையின் கட்டுமான பணிக்காக அங்குள்ள மணல்மேடுகள் சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-04ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் சூளேரிக்காடு என இரண்டு இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பேரூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி 85.51 ஏக்கர் பரப்பளவில் ₹4276.44 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும் 3வது ஆலை ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக அமைய உள்ளது. இந்த 3வது ஆலையின் கட்டுமான பணிக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 3வது ஆலையின் கட்டுமானப் பணியை துவங்க பேரூரில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல்மேடுகளை சமன்படுத்தி, கட்டுமானப் பணிக்கு பள்ளம் தோண்டும் பணி தற்போது நடந்து வருகிறது. விரைவில், கட்டுமானப் பணிகள் துவங்கும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Board ,Chennai ,Drinking water board ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...